தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படமே 'கோப்ரா'.சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தயாராகி வந்த இந்தப் படமானது நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கின்றது.
மேலும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கன்னட நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து மிருணாளினி, இர்பான் பதான், ரோஷன் ஆண்ட்ரூஸ், மீனாட்சி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு வலுச் சேர்த்துள்ளனர்.
அத்தோடு இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
'கோப்ரா' படத்தில் விக்ரம் பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கின்றார். இதனால் இப்படத்தைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வித்தியாசமாக நடத்தப்பட்டமை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாநகரங்களுக்கு சென்ற படக்குழுவினர் அங்குள்ள கல்லூரிகளில் புரமோட் வேலைகளை செய்திருந்தனர். இதனால் பொதுமக்களிடம் மட்டுமன்றி கல்லூரி மாணவர்களிடையேயும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
அதன் எதிரொலியாக திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் செய்த ஒரு விடயம் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது அக்கல்லூரி மாணவர்கள் நாளை ரிலீசாக உள்ள 'கோப்ரா' படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காததால், தாங்கள் முதலாம் திகதி படத்தை பார்க்க உள்ளதாகவும், இதனால் அன்றைய தினம் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு அக்கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
அத்தோடு அன்றைய தினம் தாங்கள் கல்லூரிக்கு வராவிட்டால், தங்களது பெற்றோருக்கு போன் செய்துவிட வேண்டாம் என்றும் அக்கடிதத்தின் மூலம் கல்லூரி முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். இந்தக் கடிதம் ஆனது தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!