• Jul 23 2025

''உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு''....அஜித் - ஷாலினி ஜோடியின் 23-ஆவது திருமண நாள் இன்று...குவியும் வாழ்த்துக்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யார் என்று கேட்டால், யோசிக்காமல் முதலில் வாயில் வரும் பெயர் அஜித் - ஷாலினி தான். பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்று பிரிவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. காதலித்தால் மட்டும் போதாது கடைசி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அஜித் - ஷாலினி ஜோடி.

அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படமும் அதுதான். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி என்பதைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.

அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெறும் ‘சொந்தக்குரலில் பாட’ என்கிற பாடலை நடிகை ஷாலினி தனது சொந்தக் குரலில் பாடி இருந்தார். படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பே ரெக்கார்ட் செய்யப்பட்ட அந்த பாடலை கேட்டதும் அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போக தொடர்ந்து ரிப்பீட் மோடில் கேட்டுள்ளார் அஜித்.

அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற போது, சென்னையில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்றிருக்கிறார் அஜித். அப்போதிருந்த சாலை வசதிக்கு சென்னையில் இருந்து ஊட்டி செல்ல குறைந்தது 12 மணிநேரம் ஆகுமாம். ஆனால் அஜித்தோ 7 மணிநேரத்தில் வந்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

அஜித் காரில் வந்த அந்த 7 மணிநேரமும் ஷாலினி பாடிய சொந்தக்குரலில் பாட பாடலை கேட்டுக்கொண்டே வந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் லூப் மோடு ஆப்ஷன் இல்லை என்பதால், இயக்குனர் சரணிடம் கேட்டு அப்பாடலை கேசட்டில் 10 முறை பதிவு செய்து வாங்கியுள்ள அஜித், அதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே சென்றாராம்.

அதேபோல் படப்பிடிப்பில் ஷாலினிக்கு அடிபட்டபோது துடிதுடித்துப் போய் இருக்கிறார் அஜித். தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து ஷாலினியும் அஜித்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் ஷாலினியிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். இதற்கு ஷாலினியும் கிரீன் சிக்னல் காட்ட இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

அஜித் ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது. 23 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 


Advertisement

Advertisement